அன்புத் தொல்லை என்ற வார்த்தைக்குப் பல அர்த்தங்கள் இருப்பதை நான் பல நேரங்களில் உணர்ந்ததுண்டு. பொதுவாக எல்லோருக்கும் தெரிந்த ஒரு அர்த்தம் தான் ஒருவரது அன்பு மிகுதி அடுத்தவருக்கு, அதாவது அன்பு செலுத்தப்படுபவருக்கு தொல்லையாக அமைவது. உதாரணத்துக்கு நீங்கள் ஒருவரது வீட்டுக்குப் போகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அவர் உங்களுக்கு இரண்டு தோசைகள் பரிமாறுகிறார். நீங்களும் வயிறு முட்டச் சாப்பிடுகிறீர்கள். அவர் உங்களை இன்னும் இரண்டு சாப்பிடச் சொல்கிறார். உங்களால் முடியவில்லை. இருந்தும் அன்பு மிகுதியால் வற்புறுத்துகிறார். இங்கு சாப்பிடச் சொல்பவர் அது மற்றவருக்கு சங்கடம் தரும் என்றோ, தொல்லையாக அமையட்டும் என்றோ நினைத்துச் செய்வது இல்லை. அவர் ஒரு அன்பு மிகுதியில், நல்லெண்ணத்தில் செய்து விடுகிறார், ஆனால் அது தொல்லையாக மாறி விடுகிறது. இது தான் பொதுவாக எல்லோருக்கும் தெரிந்த அன்புத் தொல்லை.
இதுவல்லாத இன்னொரு ரகம் இருக்கிறது பாருங்கள், அது தான் ரொம்ப மோசமானது. என் வாழ்வில் நடந்த இரண்டு சம்பவங்களை சுருக்கமாக சொல்கிறேன். அப்போது உங்களுக்குப் புரியும் இது எத்தனை மோசமானது என்று. இதைப் பற்றி இத்தனை விலாவாரியாக எழுதுவதற்கு இரண்டு காரணம். ஒன்று, இது மாதிரி ஆசாமிகளிடத்தில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். இரண்டு, இது போன்ற தவறுகள் உங்களால் மற்றவர்க்கு நடந்து விடக் கூடாது.
சம்பவம் 1
நான் திருமணமான புதிதில் ஒரு உறவினருடைய வீட்டுக்கு விருந்துக்குச் சென்றிருந்தேன். கூடவே என் மனைவியும், மாமியாரும், இன்னும் இரு சிறுசுகளும் வந்திருந்தனர். போன இடத்தில் எம்மை நன்றாகவே கவனித்தார்கள். விருந்திலும் உபசரிப்பிலும் நான் ஒரு குறையையும் காணவில்லை. என்னோடு கூட வந்தவர்களுக்கும் எந்தக் குறையும் இருக்கவில்லை. இரவு 8 மணியளவில் சாப்பாடு ஆரம்பமானது. ஒரு பெரிய மேசையில் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். நேரமும் ஓடிக் கொண்டிருந்தது.
அந்த ஊர் கிட்டத்தட்ட ஒரு குக்கிராமம். இரவு 8:30 மணிக்குப் பிறகு டவுனுக்கு போக பஸ் கிடையாது. 8:20 நெருங்கும் போது நாங்கள் சாப்பிடுவதை நிறுத்தி புறப்படத் தயாராகப் பார்த்தோம். அங்கு தான் ஆரம்பித்தது அன்புத் தொல்லை. பரவாயில்லை, மனது நிறைய சாப்பிட்டு விட்டுத் தான் போக வேன்டும் என்று அவர்களோ ஒரே அடம். நாசூக்காகச் சொல்லிப் பார்த்தேன். சாப்பாடு நன்றாகத் தான் இருந்தது, வயிறும் நிரம்பியது, நீங்கள் ஒரு குறையும் வைக்கவில்லை என்று முடிந்த வரை சொல்லிப் பார்த்தேன். அவர்கள் விடுவதாக இல்லை. இறுதியாக, கடைசி பஸ் தவறினால் சிக்கலாகி விடும் என்பதையும் சொல்லிப் பார்த்தேன். அப்போதும் விடுவதாக இல்லை. எனக்கோ தர்ம சங்கடமாகி விட்டது. அவர்கள் வீட்டில் ஒரு வான் இருக்கிறது. சில நேரம் அதில் எம்மில் டவுனுக்கு கூட்டிச் செல்ல இருக்கிறார்களோ என்றும் ஒரு சந்தேகம்.
ஒரு புறம் எரிச்சலாக இருந்தாலும், பயமாக இருந்தாலும், இன்னொரு புறம் அவர்கள் மனதை நோகடிக்கக் கூடாது என்பதற்காக அவர்கள் இஷ்டப்படி இருந்து விட்டே வந்தோம். மணி 9 தாண்டி விட்டது. கடைசி பஸ் தவறியும் விட்டது. அவர்கள் வீட்டில் வான் சும்மா தான் இருந்தது. ஆனாலும் இதில் போகிறீர்களா என்றோ அல்லது எப்படிப் போகப் போகிறீர்கள் என்றோ ஒரு வார்த்தையாவது கேட்கவில்லை. வீட்டு வாசல் வரை வந்து வழியனுப்பி வைத்ததோடு அவர்கள் கடமை முடிந்தது என்று உள்ளே சென்று விட்டார்கள். அந்த ஊரில் இரவு 9 மணி என்பது 12 மணி மாதிரி என்று அன்று தான் எனக்குத் தெரியும். பஸ் மாத்திரமல்ல, ஆட்டோ கூட அந்த இரவில் தேடிக் கொள்ள முடியவில்லை. எவ்வளவோ அலைந்து திரிந்ததன் பின்னர் இன்னொரு சொந்தக்காரரின் வீட்டைத் தட்டி, அவரது கூரையில்லாத லாரியின் பின்புறத்தில் நான், என் மனைவி, வயசான மாமியார், மற்றும் இரண்டு வால்கள் என்று எல்லோருமாக டவுனுக்கும் வந்து சேர்ந்தோம்.
இங்கு இதில் எனக்கு வந்த ஆத்திரம் என்னவென்றால், நாங்கள் பஸ் இல்லாமல் அவதிப்பட வேண்டி வரும் என்று நான் தெளிவாகச் சொல்லியும், எங்களை வற்புறுத்தி சாப்பிட வைத்தது தான். அவர்கள் செய்வது எமக்கு தொல்லையாக மட்டுமல்ல, பெரும் சிக்கலாகவும் அமையும் என்பதை தெளிவாக சொன்ன பின்னரும் கூட அன்பு செலுத்துகிறோம் என்ற பெயரில் எம்மை சிக்கலுக்குள் தள்ளி விடுவதைத் தான் நான் பிழை என்று சொல்கிறேன். இவர்கள் உதவ வேண்டும் என்பதற்காக உதவுபவர்கள் அல்ல. தனது மனத்திருப்திக்காக பிறருக்கு உதவுபவர்கள். பிறர் அதனால் தொல்லையில் விழுந்தாலும் இவர்களுக்கு அது பற்றி அக்கறை இல்லை. நான் உதவி செய்தேன் என்ற உணர்வு இவர்களுக்குப் போதும்.
என்னைப் பொறுத்தவரையில் இவர்களது உணர்வுகளைப் பெரிதாக மதித்து எம்மை நாம் துன்பப் படுத்திக் கொள்ளத் தேவை இல்லை. ரகம் அறிந்து பழக, நடக்க அவனவன் தெரிய வேண்டும். இல்லையென்றால், அன்புத் தொல்லை ஜாக்கிரதை தான்.
இதே மாதிரி ஒரு சம்பவம் அண்மையில் நடந்தது. அதை பிறகு ஒரு நாள் எழுதுகிறேன்...
No comments:
Post a Comment